ஏழரை சனி யாரை பெரிதும் பாதிக்கும் ? | Guru Waves

ஏழரை சனி யாரை பெரிதும் பாதிக்கும் ?

 

ஏழரை சனி யாரை பெரிதும் பாதிக்கும் ?

இந்த கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும். நல்ல நேரத்தின் மீது வரும் ஆர்வத்தை விட கெட்ட நேரத்தின் மீது பயத்தினால் வரும் ஆர்வமே அனைவருக்கும் அதிகம்.

 

எப்போதும் சனி பெயர்ச்சி வந்தாலே நமக்கு ஏழரை சனி வருகிறதா? அஷ்டம சனி வருகிறதா? அல்லது சனியால் இம்முறை பாதிப்புகள் நமக்கு உண்டா? இல்லையா? என தெரிந்துகொள்ள அனைவருக்குமே ஆர்வம் வந்து விடுவது இயல்புதான்.

 

சனி யாரை பெரிதும் பாதிக்கும் என்றால் ஜோதிடத்தில் கிரகங்களை இரு அணிகளாக பிரிக்கலாம். குரு பகவானை தலைமையாக கொண்ட குரு, சூரியன், சந்திரன் செவ்வாய் ஆகிய அருள் அணி கிரகங்கள் மற்றும் சுக்கிரனை தலைமையாக கொண்ட சுக்கிரன், புதன் மற்றும் சனி பகவானை உள்ளடக்கிய பொருளணி கிரகங்கள் என ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு கேதுக்களை தவிர்த்த மற்ற பரு பொருள் கிரகங்கள் பிரிக்கபட்டுள்ளன.

 

இதில் அருள் அணி கிரகங்களின் சொந்த ராசிகளான மேஷம், கடகம், சிம்மம்,விருச்சிகம் தனுசு மற்றும் மீனம் ஆகிய இந்த ஆறு ராசிகளும் மற்ற பொருள் அணி ராசிகளை விட அதிகம் பாதிப்புகளை ஏழரை அஷ்டம சனியில் சந்திக்கக்கூடியவை.

 

எனில், எஞ்சிய ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகள் சனியால் பாதிக்கப் படாதா? என உங்களுக்கு தோன்றலாம். நிச்சயம் இந்த ராசிகளும் சனியால் பாதிப்புகளை அடையவே செய்யும் என்றாலும் அது அருள் அணி லக்னங்கள் அளவிற்கான கொடுமைகளாக நிச்சயம் இருக்காது.

 

இதில் ஒரு விஷயத்தை நீங்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டும். இந்த ராசிகளை ஏழரை மற்றும் அஷ்டம சனியின் கெடுபலன்களை பார்க்கும் போது ராசிக்கும், இதுவே சனி தசா புக்தியாக இருந்தால் லக்னத்திற்கும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

என்னிடம் ஜாதகம் பார்க்க

 

உதாரணத்திற்கு நீங்கள் கடக ராசி, ரிஷப லக்னம் என வைத்து கொள்வோம். லக்னப்படி சனி நல்லவர் என்பதால் ஏழரை சனியோ அஷ்டம சனியோ கெடுதலை செய்யாது என எடுத்து கொள்ள கூடாது. ஏழரை சனியையும் அஷ்டம சனியையும் ராசிக்கு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

மேலும் சனி பகவான் ஏழரை அஷ்டம சனிகளில் கெடுதல்களை அதிகம் செய்யும் ராசி குறைவாக செய்யும் ராசி என நாம் எடுத்து கொள்வதில் ஒரு முக்கிய விஷயம் பற்றி சொல்கிறேன்.

 

சனி கெடுதல் அதிகம் செய்யும் ராசியாக நான் மேலே சொன்ன ராசிகளில் இரண்டு முழு நட்சத்திரங்களும் ஒரு துண்டு நட்சத்திரமும் இருக்கிறது. இதுவே சனி பகவான் கெடுதலை குறைத்து செய்யும் ராசிகளில் இரண்டு துண்டு நட்சத்திரங்களும், ஒரு முழு நட்சத்திரமும் உள்ளது.

 

ஆகவே முழு நட்சத்திரங்களான அஸ்வினி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம், மகம், பூரம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி ஆகிய முழு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஏழரை அஷ்டம சனிகள் கடுமையான கெடு பலன்களை செய்கின்றன.

 

எப்போதும் ஏழரை சனியிலும், அஷ்டம சனியிலும் கடுமையான பலன்கள் இருக்கவே செய்யும் அது எந்த ராசியாக இருந்தாலும் சரி!

 

இருப்பினும், அனுபவத்தில் நான் பார்த்த வரையில் ஏழரை சனி செய்யும் கொடுமைகளின் அளவை பொருத்து பட்டியல் தருகிறேன். இதன்படி புரிந்து கொண்டால் யாருக்கு சனி அதிக தீமையும், குறைந்த தீமையும் தருவார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 

  • கடகம்
  • சிம்மம்
  • மேஷம்
  • விருச்சிகம்
  • தனுசு
  • மீனம்
  • மிதுனம்
  • கன்னி
  • மகரம்
  • கும்பம்
  • துலாம்
  • ரிஷபம்

 

இது சனி பகவானுக்கு அதி பகை, பகை, சமம், அதி நட்பு, நட்பு, சொந்த ராசி மற்றும் மூலத்திரிகோண ராசி ஆகியவற்றை பொறுத்து கொடுத்திருக்கிறேன்.

 

சனியால் பாதிக்கும் ராசிகளின் வரிசை

இதன்படி சனியால் அதிகம் பாதிப்பது கடகராசியாகும், குறைவாக பாதிப்பது ரிஷபமாகும், இந்த வரிசையை உங்கள் லக்னத்துடன் பொருத்தி சனி தசா மற்றும் புக்தியின் வீரியத்தை புரிந்து கொள்ளலாம்.

 

சனி பகவான் குறைவாக கெடுதலை செய்யும் ராசியான ரிஷப ராசிக்கு வரும் கெடுதல்களே பயங்கரமாகத்தான் இருக்கும். குறைவான கெடுபலன் என்பதால் ரிஷப ராசிக்கு ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி கெடுதலை செய்யாது என்று அர்த்தமில்லை.  

 

தற்சமயம் ஜென்ம சனியில் மகர ராசியும், அஷ்டம சனியில் மிதுன ராசியும் கடுமையான சோதனைகளை அனுபவித்து வந்தாலும், இதை விட அடுத்து கடகத்திற்கு வர இருக்கும் அஷ்டம சனி அதிக பாதிப்புகளை செய்வதாகத்தான் இருக்கும்.

 

சனி பகவானின் இயல்பு இது. ஏழரை அஷ்டம சனியில் இது போன்று நடப்பதை நாம் விதியின் கையில் விட்டுவிட வேண்டும்.

 

இதுவே சனி தசா புக்தியை எடுத்து கொண்டால், கடகம், சிம்மம், மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய நான்கு லக்னங்களை தவிர்த்து மற்ற லக்னங்களுக்கு பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. அதிலும் சனி பகவான் பாவ கிரகங்களின் தொடர்புகள் இன்றி சுப கிரகங்களின் தொடர்பை பெற்று இருப்பது அவசியம்.

 

என்னிடம் ஜாதகம் பார்க்க

 

Post a Comment

0 Comments