ராசி பலன்கள் பலிக்குமா? பலிக்காதா?

ராசி பலன்கள் பலிக்குமா? பலிக்காதா?


ராசி பலன்கள் பலிக்குமா? பலிக்காதா?


இது ஒரு முக்கியமான கேள்வியாக நான் பார்க்கிறேன். ராசி பலன் பார்க்கும் பழக்கமுடையவர்களுக்கே கூட நமது ராசிக்கு சொல்லப்படும் பலன்கள் பலிக்குமா? பலிக்காதா? என சந்தேகம் வருவதுண்டு.

 

சில நேரங்களில் ராசி பலன்கள் பலிப்பதை போன்றும், சில நேரங்களில் ராசி பலன்கள் பலனலிக்காததை போன்றும் பலரும் உணர்வீர்கள்.

 

அவற்றிற்கான காரனம் என்ன ? என்பதையும், எப்போது ராசிபலன் பலிக்கும். எப்போது பலிக்காது என்பதை எல்லாம் இதில் தெளிவாக பார்ப்போம்.

 

ஜோதிடத்தில் ஒருவருக்கு பலனறிய இரண்டு அடிப்படையான விஷயங்கள் உண்டு. இந்த இரண்டை மையப்படுத்தியே யாருக்கும் என்ன மாதிரியான பலன்கள் நடக்கும் என கண்டறிய முடியும்.

 

முதலாவதாக லக்னம்! லக்னத்தை பொருத்தவரை ஒருவர் பிறக்கும் போது கிழக்கு திசையில் உதயமாகும் ராசி மண்டலம் எதுவோ, அதுவே ஒருவருக்கு லக்னமாகிறது.

 

இதை இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால். ஒரு வட்டம் என்பது 360 டிகிரி என்பதை நாம் அனைவரும் பாடத்தில் படித்து அறிந்திருப்போம் அல்லவா ? அதன் படி பூமியை சுற்றி இருக்கும் சுற்று கோணமும் 360 டிகிரி தானே! இந்த 360 ஐ 30 டிகிரிகளாக பிரித்து, மொத்தம் பனிரெண்டு பாகங்களாக்கி, ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனியே மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் என பெயரிடப்பட்டுள்ளது. இவற்றிற்கு ராசி மண்டலங்கள் அல்லது பாவகங்கள் என பெயர்.

 

இந்த ராசி மண்டலங்களில் எந்த மண்டலம் ஒருவர் பிறக்கும் போது கிழக்கு திசையில் உதயமாகுமோ அதுவே லக்னம் எனப்படும்.

 

இந்த லக்னத்திற்கு இணையாக சொல்லபடும் மற்றொரு அமைப்பே ராசி எனப்படுவது.

 

ராசி என்பது ஒருவர் பிறக்கும் போது மேற்சொன்ன 12 ராசி மண்டலங்களில் எந்த மண்டலத்தில் அதாவது எந்த 30 டிகிரியில் சந்திரன் வானில் இருக்கிறதோ அதுவே ஒருவருக்கு பிறப்பு ராசி என சொல்லப்படுகிறது.

 

ராசி லக்னம் என்னும் இந்த இரண்டை அடிப்படையாக கொண்டு மூன்று வழிகளில் பலன்கள் சொல்லப்படுகிறது. அதை பற்றியும் தெளிவாய் பார்ப்போம்.

 

கோட்சாரம், தசா மற்றும் புக்தி இந்த மூன்று வார்த்தைகளையும் நான் உட்பட பல ஜோதிடர்கள் பயன்படுத்துவதை பார்த்திருப்பீர்கள். இவை தான் அந்த மூன்றும்.

 

முதலாவதாக,

 

கோட்சாரம் என்றால் என்ன?

என பார்ப்போம்.

 

ஒருவர் பிறக்கும் போது சந்திரன் நின்ற ராசி மண்டலமே ஒருவருடைய ராசி என பார்த்தோம் அல்லவா.

 

இந்த ராசிக்கு நிகழ்காலத்தில், அதாவது தற்சமயம் வானில் கோள்கள் எத்தனை டிகிரிகள் தள்ளி அதாவது எந்த ராசி மண்டலத்தில் எந்த கோள் இருக்கிறது, என பார்த்து பலன் அறியும் முறையே கோட்சார பலன் என சொல்லப்படுகிறது.

 

இதுவே ராசி பலனாக நாம் சொல்லும் பலன்கள் ஆகும். யூடியூபிலும், டீவிகளிலும், பத்திரிக்கைகளிலும் சொல்லப்படும் பலன்கள் தான் இவை. 


அதாவது தின பலன்கள், வார பலன்கள், தமிழ்/அங்கில மாத/ஆண்டு பலன்கள், சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் போன்றவை அனைத்தும் இந்த கோட்சார பலன்கள் தான்.

 

ராசி பலனா? லக்ன பலனா?

 

என்னிடம் ஜாதகம் கேட்பவர்களும், யூடியூபில் நமது GURU WAVES சேனலிலும் பொதுவாக ஒரு கேள்வி கேட்கபடும். அதாவது இந்த பலன்கள் ராசிக்கா ? அல்லது லக்னத்திற்கா ? என கமண்டில் பலரும் பதிவிடுவர்.

 

எப்போதும் பொதுவில் சொல்லப்படும் பலன்கள் ராசிக்கானதாகத் தான் இருக்கும். உதாரணமாக விருச்சிக ராசி பலன்கள் என்றால் அது ராசிக்கானது தானே தவிர லக்னத்திற்கானதாக எப்போதும் எடுத்து கொள்ள வேண்டாம். அது துளியும் பொருத்தமற்ற பலனாகும்.

 

எனில் லக்னத்தை வைத்து எப்போது எப்படி பலனை பார்ப்பது என்றும், தசா புக்தி பலன்கள் எப்படி லக்னத்திற்கு பொருந்தும் என்பதை தற்போது பார்ப்போம்.

 

இது பெரிய சப்ஜெக்ட். இதை பின் வரும் நாட்களில் விளக்கமாக பார்ப்போம் தற்சமயம் சுருக்கமாக மட்டும் பார்ப்போம்.

 

ஒருவருக்கு நடக்கும் தசா புக்தி என்பது ஒருவர் பிறக்கும் போது அவரது சுய ஜாதகத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார். அந்த நட்சத்திரம் என்பது எந்த கிரகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது, என்பதை பொருத்து ஒருவரின் முதல் தசை மற்றும் புக்தி எது என கணிக்கப்படும்.

 

அதில் இருந்து தற்சமயம் என்ன தசா புக்தி நடந்து வருகிறது என்பதை கணக்கிட்டு, அது லக்னப்படி இந்த லக்னத்திற்கு நட்பு கிரகமா, யோக கிரகமா என்பதை ஆராய்ந்து, வேறு எந்த கிரகங்களின் தொடர்புகளை எல்லாம் பெற்றுள்ளது, அந்த தொடர்புகள் ஜாதகருக்கு நன்மையை செய்யுமா? தீமையை செய்யுமா? அது எந்த ஸ்தானத்தில், எந்த சாரத்தில் இருக்கிறது என பலவற்றையும் ஆராய்ந்து பலன் எடுக்கப்படும்.

 

இவற்றோடு மேற் சொன்ன கோட்சாரத்தையும் இணைத்தே பலன்களை ஒப்பிட்டு சொல்ல வேண்டும்.

 

அது சரியாக அமைவது என்பது ஒரு ஜோதிடரின் அனுபவம் மற்றும் ஞானத்தை சார்ந்தது.

 


கோட்சாரம் என்பது ஒரு ராசியில் பிறந்த அனைவருக்கும் பொருந்தும் அமைப்பு. அதாவது உதாரணமாக தனுசு ராசியில் ஒருவர் பிறந்திருக்கிறார் என பலன் சொல்லப்பட்டால் அது தனுசு ராசியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.

 

தனுசு ராசியில் பிறந்த ஒருவர் பல்வேறு நிலைகளில் இந்த புவியில் வாழ்வார்.

 

ஒருவர் பிரதமராக இருக்கலாம், ஒருவர் உலக பணக்காரராக இருக்கலாம், ஒருவர் பிச்சைகாரராகக்கூட இருக்கலாம். இதை ஒருபோதும் ராசி தீர்மானிக்காது.

 

ஒருவர் வாழும் நிலையை தீர்மானிப்பது அவரது சொந்த ஜாதகமும், நடக்கும் தசா புக்தியுமே ஆகும்.

 

இது ஜாதகத்திற்கு ஜாதகம் மாறுபடும்.

 

அரசனாக இருப்பவருக்கு பிரச்சனைகள் ஏற்படுவதும், பின் அந்த பிரச்சனைகளில் தீர்வுகள் ஏற்படுவதும் நிகழும். 


ஆண்டியாக இருப்பவருக்கும் பிரச்சனைகள் ஏற்படும், அந்த பிரச்சனைகள் சரியாகவும் செய்யும். 


இப்படி நிரந்தர வாழ்நிலைக்குள் ஏற்ற இறக்கங்களை தரக்கூடியது தான் கோட்சாரத்தின் பங்கே தவிர கோட்சாரத்தை அதாவது ராசியை மட்டும் வைத்து அனைத்தையும் கணித்து விட முடியாது.

 

பிறகு ஏன் ராசிக்கு மட்டும் பலன்கள் சொல்லப்படுகிறது என்றால், லக்னத்தை வைத்து சொல்லும் பலன் ஒவ்வொருவரின் ஜாதகத்தை வைத்து சொல்ல வேண்டும் என்பதால் தான்!

 

இது பொதுவில் சொல்ல சாத்தியமில்லை என்பதால் ராசிக்கான பலன்கள் சொல்லப்படுகிறது.

 

இதை சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒருவருக்கு பலன்களை தருவதில் ராசிக்கு 25 % பங்குண்டு தசாவிற்கு 25 % பங்குண்டு, புக்திக்கு ஒரு 25 % பங்குண்டு மற்ற அந்தர சூட்சும விஷயங்களுக்கு ஒரு 25% பங்குண்டு என எடுத்து கொள்ளலாம். இதுவும் தோராயம் தானே தவிர துல்லியமல்ல.

 

அந்தர சூட்சும விஷயங்கள் குறித்து வேறொரு கட்டுரையிள் பார்ப்போம்.

 

பலனை தருவதில் இதற்கு இப்படி பங்குண்டு என சொன்னாலும், முக்கியத்துவ ரீதியில் இவற்றை நாம் முதலில் தசைக்கும், இரண்டாவது புக்திக்கும், மூன்றாவது கோட்சாரத்திற்கும், நான்காவது அந்தர சூட்சுமங்களுக்கும் என வரிசைப்படுத்தலாம்.

 

அதுவும் ஏழரை சனி அஷ்டம சனி கோட்சாரத்தில் நடக்காமல் இருக்கும் போது மட்டுமே இப்படி வரிசைப்படுத்துவது பொருந்தும்.

 

எழரை மற்றும் அஷ்டம சனி நடக்கும் போது இவற்றின் தாக்கங்கள் மேலோங்கி பலன்களை தருவதில் முதன்மையானதாக கோட்ச்சாரம் வந்து நிற்கும்.

 

மொத்தத்தில் எளிமையாக சொன்னால் நல்ல தசா புக்திகள் நடப்பில் உள்ள போது, கோச்சாரமும் நல்ல நிலையில் இருக்கும் போது மிக சிறந்த பலன்களையும், கோட்சாரம் கெட்ட நிலையில் இருந்தால் சிறிய அளவு சிரமங்களையும் தரும்.

 

அதுவே கெட்ட தசா புக்தி நடப்பில் இருக்கும் போது கோட்சாரம் நல்ல நிலையில் இருந்தால் கெடுதல்கள் சற்று குறையும். அதுவே கோட்சாரமும் கெடுக்கும் நிலையில் இருந்தால் கெடு பலன்கள் கூடுதலாக இருக்கும்.

 

ராசி என்பது சந்திரனை பொருத்து என்றும், ராசிபலன் என்பதும் சந்திரனை பொருத்து என்றும் பார்த்தோம். 


அதே வேலை லக்னம் என்பது என்ன என்பதையும் பார்த்தோம். லக்னத்திற்கு பலன்களை எடுக்கும் போது தசா புக்தியின் அவசியம் என்ன என்பதையும் பார்த்தோம். 


இந்த தசா புக்தியை தீர்மானிப்பதும் சந்திரன் நின்ற நட்சத்திரமே எனவும் பார்த்தோம்.

 

இப்படி ஜோதிடம் ராசி மற்றும் லக்னத்திற்கு இடயே ஓர் தொடர்பை ஏற்படுத்தி பலன் சொல்லும் வழிமுறை என்பதை தற்சமயம் புரிந்திருப்பீர்கள்.

 

இந்த பலனை சரியாக சொல்வது என்பது, சரியான ஜோதிடரை நீங்கள் பெறுவதில் தான் சாத்தியம்.

 

எங்களிடம் ஜாதகம் பார்க்க:- CLICK HERE


எங்களிடம் திருமண பொருத்தம் பார்க்க:- CLICK HERE


சமூக வலைய தளங்களில் எங்களை பின்தொடர CLICK HERE

Post a Comment

0 Comments